Saturday, November 28, 2009

கணித விஞ்ஞானத்துறைகளில் தமிழ்மொழி மாணவர்கள் சாதனை

அண்மையில் வெளியாகிய க பொ த உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிமூல மாணவர்கள் சாதனை நிலை நாட்டியிருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்வைத்தருகிறது.சாதனைகளின் வரலாற்றில் இந்த தமிழ் மொழிமூல மாணவர்களும் தங்கள் பெயர்களை பொறித்திருக்கிறார்கள்.நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழலிலும் கூட இவர்கள்சாதனைகளை நிலை நாட்டியிருப்பது மிகச்சிறப்பான விடயமே,

க.பொ.த சாதரண தர பரீட்சை மாணவர்களின் உயர்கல்விக்கான பாதையின் முக்கிய கட்டம் என்ற வகையில் இவர்களின் இந்த வெற்றி இவர்களை ஒரு சிறப்பான வழியில் சிறப்பான வாழ்க்கையை அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆம்
தமிழ்மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றிய வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி மாணவி மைதிலி சிவபாதசுந்தரம் விஞ்ஞானத்துறையில் தமிழ்மொழிமுலம் மற்றும் அகில இலங்கையில் முதலாமிடம் பெற்றிருக்கிறார்.யாழ்ப்பாண மாவட்டத்தை தனது சொந்த இடமாக கொண்ட இவர் சைவ மங்கையர் கழகத்தை தன் கல்விக்காக தெரிவு செய்து கல்வியைப்பயின்றவர், தனது இந்த பெறுபேற்றில் பாடசாலையின் பங்களிப்பைக்கூட அவர் நினைவுபடுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்,” உயர்தரத்தைப்பொறுத்தமட்டில் கற்கும் பாடசாலை,மற்றும் படிக்கும் பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் ஆகியவற்ற்றின் பங்களிப்புத்தான் தன் இந்த பெறுபேறுக்கான முக்கிய காரணமாக அமைந்தது என்று பாடசாலையில் பெருமை கொள்கிறார் மைதிலி,அத்தோடு தன் இரண்டு வருட கால உயர்தர கல்வி வாழ்க்கையில் ”இன்னொரு நாள்” என்ற ஒரு சொல் இருந்ததே இல்லை என்றும் அன்றன்றே கவனம் எடுத்து படித்தமையே என்னை இப்படியாக வெற்றிகொள்ளசெய்திருகிறது என்று தன் வெற்றிக்கான வழியை பகிர்ந்துகொள்கிறார் மைதிலி.
பாடசாலை அதிபர் திருமதி கஜேந்திரதாஸ்,கல்லூரி மற்றும் பிரத்தியேக ஆசிர்யர்கள்,மற்றும் அம்மா அப்பா,அக்கா அண்ணா என்று தன் வெற்றிக்குப்பின்னால் நின்ற அனைவரையும் நினைகூர்ந்து நன்றி பகர்ந்துகொள்கிறார்.பாடசாலை அதிபர் அவர்கள் மைதிலியைப்பற்றிக்குறிப்பிடும்போது “ கல்வித்துறை மட்டுமல்லாமல் இந்த மாணவி கலைத்துறைகளான நடனம் சங்கீதம் மற்றும் நாடகங்கள் என்பன மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறைகள் போன்றவற்றிலும் தன் ஈடுபாட்டைதிறமையாக வெளிப்படுத்தியவர்” என்று பெருமை கூறுகிறார்.அடுத்து
தமிழ் மொழிமூலம் பரீட்ச்சைக்குத்தோற்றிய ஹாட்லியின் புதல்வன் ஜோன் நிராஜ் கணிதத்துறையில் தமிழ் மொழி மூலம் முதலாவது இடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.யாழ்ப்பாண மாவட்டம் நெல்லியடியை தன் சொந்த இடமாகக்கொண்ட இவர் தன் இரண்டாம் நிலைக்கல்விக்காக ஹாட்லிக்கல்லூரியில் அனுமதி கிடைத்து கல்வி பயின்றவர்.சிறு வயதுமுதலே பொறியியலாளராக வரவேண்டும் என்ற கனவு தனக்கு இன்று கிட்டியிருப்பதாக மகிழ்ச்சிகொள்கிறார் ஜோன் நிராஜ்.அந்தக் கனவுடன் தன் இலட்சியம் நிறவேறுவதற்காக அதே இலக்குடன் கல்வி பயின்றதும் இலக்கு எதுவோ அதை எட்டியிருப்பதும் அளவிலா மகிழ்சியைத்தருகிறது என்று குறிப்பிடுகிறார்.பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் அதிபர், மற்றும் தனக்கு கல்வி புகட்டிய கல்லூரி ஆசிரியர்கள்,தனியார்கல்வி நிலைய ஆசிரியர்கள்,இவர்கள் எல்லாம் தன் கல்வியில் இருந்த ஈடுபாட்டுக்கான வழிகாட்டிகள் என்று நினைவூட்டுகிறார் ஜோன் நிராஜ்.அதுமட்டுமல்லாமல் தன் அன்பான அம்மா அப்பா பாசம் மிகுந்த அக்கா மற்றும் அத்தான் தன் கல்வியில் கிடைத்த ஊக்கிகள் என்று அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்.எந்த நிலையிலும் உன்னால் வெற்றி கொள்ள முடியும் என்று ஊக்குவித்துக்கொண்டே இருப்பார்களாம்.ஹாட்லியின் அதிபர் இந்த மாணவனைப்பற்றிக்குறிப்பிடும்போது ‘ஜோன் நிராஜ் கல்லூரிக்காலங்களில் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன்னோடியான மாணவனாக என்றும் இருந்தார் என்றும் இவரின் கணிதப்புலமை மற்றவர்களை வியக்கும் படியாக அமைந்திருந்தது” என்றும் குறிபிடுகிறார்.அதுமட்டுமல்லாமல் அண்மையில் ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நாளில் இடம்பெற்ற இரத்ததானம் வழங்கும் சேவையில் ஜோன் நிராஜும் தன் பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதையும் நினைவுபடுத்தினார்.இந்த நிகழ்வு அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் அதிகூடியளவு மாணவர்கள் இரத்த தானம் வழங்கியதாக சாதனையாகவும் பதியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியாக சாதனைகளில் தன் பங்களிப்புக்களை ஈடுபடுத்தும் இந்த மாணவன் ஜோன் நிராஜ் ஹாட்லியின் வரலாற்றிலும் அகில இலங்கையிலும் தன் பெயரைப்பொறித்திருக்கிறார்.இப்படியாக கணிதத்துறையில் தமிழ்மொழி மாணவர்கள் பலகாலம் தொட்டே சாதனை படைபவர்கள் என்ற அடிப்படையில் ஹாட்லியின் ஜோன் நிராஜ் இந்த வருடம் அந்த சாதனையில் தன்பெயரைப்பொறித்திருக்கிறார்.


இப்படியாக தமிழ்மொழிமூல மாணவர்கள் இந்த வருடம் தங்கள் சாதனைகளை பொறித்திருப்பது சந்தோஷமளிக்கிறது.மைதிலி சிவபாத சுந்தரம் தன் உயர்கல்வியில் இருதய சத்திர சிகிச்சை நிபுணராக வரவேண்டுமென்றும் அதன் மூலம் தற்காலத்தில் மிகுந்த சேவை செய்ய முடியும் என்றும் தன் எதிர்காலத்தை வழிசெய்கிறார்.அதேபோல ஜோன் நிராஜ் "மிகச்சிறந்த கணனிப்பொறியியலாளனாக வரவேண்டுமென்பதே தன் இலட்சியமாகும்" என்று மனம் திடமாகச்சொல்கிறார்.

வெற்றிகளின் வளர்ச்சியில் இந்த மாணவர்களின் இலட்சியங்களும் வெற்றிபெற வேண்டும் என்று கரவைக்குரல் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறது.இன்றைய மகிழ்ச்சியான சாதனைவெற்றிக்களைப்போலவே அதனூடான இன்பத்தைப்போலவே என்றும் நீங்கள் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக மிளிரவேண்டும் என்று கரவைக்குரல் வாழ்த்துகிறது.

No comments: